0
         

உள்ளதை உள்ளபடி உண்மையாய் உரைத்திட்ட உத்தமராம் சற்குருவிற்கு உளமார்ந்த நமஸ்காரம்!

தன்னுள்ளே தாம் உணர்ந்த பிரம்மம் தன்னை எம்முள்ளே யாம் உணர ஒளியூட்டிய எம் குருவே! அன்புருவே! உமக்கு நன்றி!

 

 

வணக்கம் கனடா யோக வேதாந்த நிறுவனம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

    எங்கும் நிறைந்த பரம்பொருள், தான் படைத்தத் தன்னுருவான மனிதனுக்குத் தன்னைப் பற்றித் தானே எடுத்துரைக்கும் விந்தை தான் ரிஷி பரம்பரை! அம்மையப்பன் தான் அகில உலகிற்கும் தாய்தந்தையர் என்பதைப்போல், சதாசிவமான தட்சினா மூர்த்திதான் இந்த ரிஷி பரம்பரைக்கு ஆதி குரு என்பது வேத வாக்கு இந்த பாரம்பாரியம் மிக்கக் குரு பரம்பரையிலே, ஆதி சங்கரரின் வழியொற்றி, சனாதன தர்மத்திற்குப் புத்துயிர் ஊட்டி, ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் தர்மநெறியைப் பரப்புகின்ற ஒளி பணியாளர்களாக உருவாக்கிய பெருமைக்குரிய சுவாமி சின்மயானந்தாரின் சீவமிரு சீடர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் இக்கனடா யோக வேதாந்த நிறுவனத்தின் நிறுவனராகவும், இயக்குனராகவும், குருவாகவும் இக்கனடிய மண்ணில் அதி சிறப்பாகத் தமது ஆன்மிகப் பணிகளை ஆரவார ஆர்ப்பாட்டங்கள் எதுவுமின்றித் தொடர்ந்து ஆற்றிக் கொண்டிருந்த ஸ்வாமி பரமாத்மானந்த ஸரஸ்வதி அவர்கள். நாற்புறமும் கடல் சூழ்ந்து இயற்கை எழில்கொஞ்சும் இலங்கைத் திரு நாட்டில், அகிலமெல்லாம் காக்கும் அன்னையாம் நாகபூஷணி அருளாட்சி செய்யும் நயினைத் தீவில், சுவாமி பரமாத்மானந்த ஸரஸ்வதி என்று ஆன்மீக சாதகர்களால் போற்றப் படுகின்ற, ஈழத்து வேதாந்தியான எங்கள் குரு, 1945 ஆம் ஆண்டு மார்ச் மாதம், 3ஆம் தேதி, நல்லதம்பி வைத்தியலிங்கம் என்னும் அருளாளருக்கும், நாகம்மா என்னும் புண்ணியவதிக்கும் தலைமகனாய்ப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்டபெயர், பரராஜசிங்கம். பெயருக்கேற்றபடி எதற்கும் அஞ்சாத சிங்கமாய்த் துணிவுடன் தான் விரும்பிய கொள்கைகளுக்கு ஏற்றபடி செயல்பட்டார். இவரது இளம்பருவத்திலயே பிரம்மம் இவரைத் தன்வசப்படுத்திக் கொண்டது. பள்ளிப்படிப்பை முடித்த பிறது, ஸ்கந்த வரோதயா கலல்லூரியில் பயில்கையில் பொன்னம்பல மாஸ்டாரின் தொடர்பால் மார்க்கசீயப் கம்யூனிசக் கொள்கைகள் இவரைக் கவர்ந்தன. படிப்படியாயப் பிரம்மம் இவரைத் தன்னை நோக்கிப் திருப்புவதை அறியாமலேயே இந்தப் பரா என்னும் இளைஞர் ராஜ சிங்கமாய் வளர்ந்தார். துணிவு மிக்கவராய், எதற்கும் கேள்வி கேட்பவராய், எதிர்த்துச் செயல்படுபவராய், கடவுளை நம்பாதவராய், கடவுளைப்பற்றிப் பேசுபவரிடம் எல்லாம் பலநுாறு கேள்விகளைக் கேட்டு மடக்குபவராய் வளர்ந்தார். இப்படி இவரது இளம்பருவ வாழ்க்கை முறை, வருங்காலத்தில் உலக சம்பந்தமான கவர்ச்சிகள் அனைத்தையுமே துறக்கக் கூடிய சூழ்நிலையை, மன உருதியை, தொலைநோக்குச் சிந்தனையை, சமுதாய நலனில் அக்கறையை, எந்த விஷயத்தையும் ஆழமாகப் பார்க்க கூடிய திறமையை, நிர்வாகத் திறனை வளர்ககும் விதத்தில், படிப்பு, வேலை, பயணம், என்று அடுத்தடுத்து அமைந்தன. இதற்கிடையில் பகுத்தறிவும், பிரம்ம துாண்டலும் பராவை அலைக்கழித்தன. காட்டாறாய் செயல்பட்டுக்கொண்டிருந்த இந்த இளைஞனை, சந்திக்கவேண்டியவர் சந்தித்தார். இலங்கைக்கு வருகை புரிந்த ஸ்வாமி சின்மயானந்தரின் கீதைச் சொற்பொழிவுகளுக்குச் சென்றவர், காந்தத்தால் இழுபட்ட இரும்பு ஆனார். சின்மயானந்தரின் பார்வையில் சிக்குண்டு அவருக்குத் தேவையான மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டார். ஆறு, கடலை நெருங்கியது. 21 வயதில் அரசுப் பணியில் சேர்ந்தவர், 45 வயதில் அப்பணியைத் துறந்து இந்தியாவிற்குச் சென்றார். காலம் அவரை உருட்டி அளவிலா அனுபவங்களைத் தந்தது. கடைசியில் ஈழத்தில் விளைந்த ஆன்மீக நல் முத்து, வட இந்தியாவில், ரிஷிகேசத்தில் தனது குரு சின்மயானந்தரை அடைந்தது. பிரம்மம் சேர்க்க வேண்டிய இடத்தில் எமது குருவைக் கொண்டு சேர்த்தது. ரிஷிகேஷத்தில் ஆசிரம சூழலில் வேதாந்தப் பல்கலைக் கழக்த்தில் ஐந்து ஆண்டுகள் வேத உபநிஷதங்களும், யோகக் கலையும் பயின்று, “யோகாசார்ய” என்ற பட்டம் பெற்றார். அதோடு கடுமையான நெறிமுறைகளுக்குள் பயிற்சிகளை மேற்கொண்டு, உலக வாழ்க்கையைத் துறந்து, முறைப்படி சந்நியாச தர்மத்தை ஏற்றார். ‘வ்யக்த சைதன்யா’ என்னும் திருநாமம் ஏற்று, ஒரு பிறவியில் மறுபிறவி பெற்றார். பயிற்சிகள் முடிந்து, தென்னாப்ரிக்காவிற்குச் சென்று ஆன்மீகப் பணியாற்ற விரும்பியவரை, குரு சின்மயானந்தர், உனது தமிழ் மக்கள் மிகச் சிறந்த பக்திமான்கள்; ஆனால் அவர்களிடம் ஞானமில்லை; ஞானமில்லையேல் முக்தி இல்லை. அவர்களிடம் சென்று உனது பணியைத் துவங்கு. வாழ்க்கையின் உண்மைத்தன்மையை, உனது உபதேசத்தால் அவர்களுக்கு உணர்த்து! என்று கட்டளையிட்டார். குருவின் கட்டளையை சிரமேற்கொண்டு கனடாவிற்கு வந்த இந்த எளிய துறவி, சுவாமி தத்துவானந்தா என்ற துறவியின் துணையுடன் மிக அமைதியாக, மிக மெதுவாகத் தமது பணியைத் துவங்கினார். பண்டித வரதர் முதலான ஐந்து பெருந்தகையாளர்கள் இவரது ஆன்மீக உயர்வைப்புரிந்து கொண்டு ஆதரவளித்தனர். ஆரம்பத்தில் தன்னை மிகச் சாதாரண ஒருவராகவே காட்டிக்கொண்டு, வெள்ளை ஆடையுடன், ஆனால் அதே சமயம் பிரம்மத்தொடர்புடன், ஆனமீக முதிர்ச்சியுடன் தனது குருவின் ஆணையை நடைமுறைப்படுத்தத் துவங்கினார். வ்யகத் சைதன்யா என்ற தமது திருப்பெயரை வெளிப்படுத்தாமல், தமது 60 வயதில்தான், தன்னை சுவாமி பரமாத்மானந்த சரஸ்வதியாக, ஒரு சன்னியாசியாகக் காவி உடை அணிந்த துறவியாக எங்களிடம் தம்மை வெளிப்படுத்திக் கொண்டார். அதுவரை குரு என்று தன்னை அழைக்கக்கூட அவர் எங்களை அனுமதிக்கவில்லை. முதல் மாணவன் என்றே தன்னைக் கூறிக்கொண்டார். 1998ல் கனடா யோக வேதாந்த நிறுவனத்திற்கு அடிக்கோலிட்ட சுவாமி பரமாத்மானந்தா, இந்த 19 ஆண்டுகளாக ஆற்றிய ஆன்மீகப் பணிகளுக்குச் சான்றாக, ஆதாரவாக அவர் எழுதிய ஆன்மீக நுால்களின் வரிசை, வெளியிட்ட குறுந்தகடுகளின் அணி நிலைபெற்றுள்ளன. மேலும், தமது குருவான சின்மயானந்தரின் பெயரில், ஒளிமயம் என்ற மாத சஞ்சிகையைத் தொடர்ந்து வெளியட்டார் (சின்மயம் என்றால் ஒளிமயம்). 2009 ஆம் ஆண்டு கைலாச மானஸசரோவர் யாத்திரைக்கு மாணவர்களை அழைத்துச் சென்றார். இந்தியாவில் பாகிஸ்தான் தீவரவாதிகளின் அதிரடித் தாககுதல்களின் போது, ஜம்மு-காஷ்மீரில் இருந்த ஒரு சிவன் கோவில் சிதைக்கப்பட்டது. அங்கிருந்த ஒரு வயதான சந்நியாசி, 12 ஜேயாதிர் லிங்கங்கள் சேர்ந்த ஒரு சிவலிங்கத்தை எப்படியோ காப்பாற்றி, ரிஷி கேசத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். 2012 ஆம் ஆண்டு ஏதோ ஒரு காரணத்திற்காக அங்கு சென்றிருந்த எமது குருவிடம் அந்தத் துவாதச லிங்கத்தை அவர் ஒப்படைத்து விட்டார். எந்தவித திட்டமும் இல்லாத நிலையில் எமது குருவும் அதனைப் பிரம்மத்தின் கட்டளையாக ஏற்று, ரிஷிகேஷில் கங்கைக்கரையில் தனது ஆதரவில் இயங்கிவரும் கார்த்திகேயா ஆசிரமத்திற்கு அருகில், துவாதச லிங்கக்கோயில் ஒன்றினை, அச்சமயத்தில் வேறு ஒரு திருப்பணியை முடித்து ஊர் திரும்ப இருந்த தமிழ்நாட்டுச் சிற்பிகளை இறையருளால் சந்திக்க நேர்ந்து, மிக அருமையாகத் தமிழகக் கலைப் பாணியில் மூன்றே மாதங்களில் கட்டினார். அந்த உத்தமமான லிங்கத்தை அதில் பிரதிஷ்டை செய்து அக்கோயிலில், கனடா வேதாந்த நிறுவனம் – கனடா; ஸ்தாபகர்- ஸ்வாமி பரமாத்மானந்த ஸரஸ்வதி, நயினா தீவு, என்ற பெயர்ப் பலகையும் பதித்துள்ளதை அங்கு செல்பவர் காணலாம். இதே போல், தான் பிறந்து வளர்ந்த நலம் மிகு நயினா தீவில், முருகன் கோயிலுக்கு அருகில் ஓர் அழகிய தியான மண்டபத்தைக் கட்டியுள்ளார். தியானம் பழக விரும்புவர்கள் அங்கு சென்று தினமும் பயிற்சியில் ஈடுபடும் வண்ணம் அது அமைந்துள்ளது. அதிலேயே சிறிய நுாலகத்தையும் அமைத்திருக்கின்றார். இறையருள் இல்லாமல் இத்தகைய அரும் பணிகளைத் தனி இருவரால் செய்ய முடியுமா? இப்படி பிறரறியாமல் எமது குரு ஸ்வாமி பரமாத்மானந்த ஸரஸ்வதி அவர்கள், மிகச் சிறப்பான, அற்புதமான ஒரு வாழ்க்கை வாழ்ந்து, தமது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பிரம்மத்தின் துணை பெற்று, எம்மைப் போன்ற மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, ஒளி வாழ்க்கை பெறும் வழிகளை அலுப்பு சலிப்பின்றி எடுத்துரைத்து எம்மையும் ஒளிபெறச் செய்தார். ஒரு நிமிடத்தையும் வீணாக்காமல் இறைப்பணியாற்றினார். ஒய்வு ஒழிவற்று இயங்கிய உடலுக்கு ஓர் இடைவெளி விட்டுத் தீர்த்த யாத்திரைக்குப் புறப்படட்ார். குரு பூ ர்ணிமாவையும் கொண்டாடி மகிழ்ந்து இந்தியத் திருத்தல யாத்திரையை 2017ஆம் ஆண்டு ஜூலை மாத் 18ஆம் நாள் மூன்று மாணவர்களுடன் உடன் சென்ற இருவருடனும் துவங்கினார். பயணம் பாதியிலேயே நிறைவு பெற்று விட்டது. மிகுந்த முனைப்புடன் இயங்கிய உடலுக்கு ஓய்வு தர விரும்பிய பிரம்மம், ‘முக்தி அல்லது வாழ்வின் நிறைவு!’ என்று அவரது கடைசிப் புத்தகத்திற்குத் தலைப்பிடச் செய்து, அவர் செய்த பணிகள் நிறைவடைந்தது விட்டன என்ற குறிப்பை தந்தது இப்போது தான் விளங்குகிறது. தமிழ்நாட்டில் பெருமை வாய்ந்த பழமைத் தலங்கள் பலவற்றிற்கும் சென்று இறை சக்தியை வழிபட்டுத் தனக்குக் காட்சியளித்து வாழ்த்து கூறிய ரமணர், ஷூர்டி பாபா போன்ற மகான்களைத் தொழுது, பு+ரி, ஜகன்னாதரையும் தரிசித்துக் கடைசியில் ரிஷிகேஷிற்குச் சென்றவர், அந்த கார்த்திகேயா ஆpரமத்திலிருந்து 16.08.2017 புதனன்று ஆதி சங்கரர் சமாதியடைந்த கேதார் நாத்திற்குச் சென்றார். இரவு 10:30 மணிக்கு, அங்கு மிக இயல்பாக இருந்து, முருகா! முருகா! முருகா! என்று தனது இஷ்டதெய்வமான முருனை 3 முறை அழைத்து சடவுடல் நீங்கி, ஒளியுடல் பெற்றார். அவரது உடல் ரிஷிகேஷதிற்குக் கொண்டுவரப்பட்டு அதே கார்த்திகேய ஆசிரமத்தில் உள்ள துறவிகளின் சிரத்தையான ஏற்பாடுகளுடன், குருவினால் உருவாக்கப்பட்ட துவாதச லிங்கக்கோவில் வளாகத்தில் சந்நியாச முறைப்படி எல்லாக் கிரிளைகளும் செய்யப்பட்டு, ஊர்வலமாகக் கொண்டு சென்று கங்கைத்தாயின் மடியில் ஜலசமாதியாக சமர்ப்பணம் செய்யப்பட்டது. குருவாகிய ஸ்வாமி பரமாத்மனந்த ஸரஸ்வதி மறைந்துவிட்டார் என்று சொன்னாலும், அவர் மறையவில்லை. மகானாகிய அவரது உடலுக்குத் தான் மறைவே ஒழிய, சாகா நிலை அடைந்த அவர் ஒளியுடன் கூடிய அழிவில்லா சாஸ்வத நிலையில் இருப்பவர். மனப்பூர்வமான பக்தியுடன் உண்மையாக வழிபடுபவர்களுக்கு நிச்சயம் குரு உற்ற துணையாக இருந்து காப்பாற்றுவார்.

குரு வாழ்க!!