மனம்தான். மனத்துள் மாற்றம் நிகழாதவரை வெளியில் நாம் மாற்றத்தைக் கொணர்வதற்காக மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் முழுமைபெற்று விளங்காது. சமூகம் என்பது தனி மனிதர்களின் கூட்டுத் தொகுப்புதான். சமூகமாற்றம் என்பது தனி மனிதர்களிடையே ஏற்படும் மாற்றத்தைச் சார்ந்தே விளங்குகிறது.
திருவள்ளுவர் ‘மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்’ எனக் கூறியதற்கும் ‘மனத்துக்கண் மாசிலன் ஆதலின்’ அவசியத்தை வலியுறுத்தியதற்கும் இதுவே காரணம். ஒரு மனிதனிடம் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பது குற்றமன்று. ஆனால் அவனிடம் கடவுள் நம்பிக்கை இருந்து நற்குணங்கள் இல்லாமல் போனால் எந்தப் பயனும் இல்லை. மனிதனுக்கும் மனிதக் குரங்குக்கும் இடையேயான சதவீத வேற்றுமை எண்ணிக்கை இரண்டு முதல் மூன்றுவரை மட்டுமே. மனிதனிடம் காணப்படும் விலங்கியல் இயல் பூக்கத்தின் வலிசான்று மேம்பட்டு விளங்கும்வரை மனிதன் மனிதனாக இருக்கமுடியாது. மாறாக அவன் ஒரு சமூக விலங்காக மட்டுமே இருக்கமுடியும். மனம், மனம் சார்ந்த வாழ்வு இதுவே மனிதனை விலங்கிலிருந்து தனிமைப்படுத்தி உலகுக்கு மனிதனாக அடையாளம் காட்டுகிறது.
இந்த அடையாளம் முழுமையானதாக விளங்குவதற்கு மனம் தெளிவு பெற்றதாக இருக்க வேண்டியது அவசியம். இத் தெளிவிற்கான வழியைச் சமயநெறி சமைக்க வேண்டியது அவசியம். ஆனால் இன்று சமயத்தின் பெயரால் மதம் பிடித்து மனிதன் அலைகிறான். விலங்கு மனத்தின் செயல்பாடே அவனிடம் விஞ்சி நிற்கிறது. அழித்தல், ஒழித்தல், கொலை, ஆக்கிரமிப்பு போன்ற வன்முறை வெறியாட்டங்களை மதத்தின் பெயரால் மனிதன் நடத்திக் கொண்டிருக்கிறான். சமய உணர்வு வேறு, மதவெறி வேறு. மதவெறி மனித இனத்தை அழிக்கவல்லது; சமய உணர்வு, ஆன்மா அனைத்தையும் ஒன்றெனக் காண வழிகாட்டுவது; அனைத்துள்ளும் ஒருமைப்பாட்டை உணர்த்தவல்லது. மனிதன் தன் மனவக்கிரங்களை, சிடுக்குகளை புரிந்து கொள்ள முயற்சித்தலே சமய வாழ்வின் தொடக்கமாகும். பயம், பொறாமை, அவா, வெகுளி, பகைமை, ஒப்பிடல், போட்டி என்பன போன்ற மனவக்கிரங்களை, சிடுக்குகளைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
அறிவைச் சேகரித்தால் மட்டும் போதாது. பொருளீட்டத்தில் மட்டும் வாழ்க்கை நிறைவுறாது. மாறாக தன்னை உணர்தலில் தான் வாழ்வு முறையாக முழுமை பெறுகிறது. இதற்கான வழியில் மனிதன் தன் ஆற்றலைக் கொண்டு எடுத்துச் செல்வதில்தான் உண்மையான வாழ்க்கை ஆரம்பிக்கிறது. தன்னை அறிந்தவனால் மட்டுமே பிறரைப் புரிந்து கொள்ளவும் பிறருடனும் பிறவற்றுடனும் சரியான உறவுமுறை கொள்ளவும் முடியும்.
தன்னைப் புரிந்து கொள்வதற்கான முதல்படி மன வக்கிரங்களிலிருந்து விடுதலை பெறுவதே. எவ்வாறு இதனைச் செய்வது? தீய எண்ணங்களுக்கு மாறாக நல்ல எண்ணங்களை எண்ணுவதன் மூலமா? அல்ல! மாறாக இம்மனச்சிடுக்குகளைப் புரிந்து கொள்ள முயல்தல் வேண்டும். இப்புரிதலே தெளிவை ஏற்படு;த்தும். ஒழுங்கீனத்திலிருந்து ஒழுங்;குக்கு முயல்வதல்ல வாழ்க்கை. ஒழுங்கீனத்தை முற்றிலும் புரிந்து கொள்வதன் மூலம் ஒழுங்கமைவை வெளிக்கொணர்வதே வாழ்க்கையாகும். இப்புரிதலில்தான் தியானத்தின் மாட்சிமையும் சமய வாழ்வின் உண்மையும் அடங்கி உள்ளது.
புரிதலே தெளிவாகும். தெளிந்த மனத்தின் செயல்பாடுகள் நேரியதாகவும் பண்பட்டதாகவும் விளங்கும். இதன் பிரதிபலிப்பைப் புறத்திலும் காணமுடியும். ஏனெனில் அகமே புறமாகவும் இருக்கிறது. இன்றைய வன்முறை வாழ்வியலுக்கான நல்ல மருந்து தெளிந்த மனத்தின் செயல்பாடு மட்டுமே. இதற்கான அக்கறை நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டியது இப்போதைய அவசரத் தேவையாகும். அப்போது மட்டுமே மனித வாழ்வியல் அர்த்தமுள்ளதாக விளங்க முடியும். எனவே சிந்தியுங்கள்; தெளிவு ஏற்படும்.