மனிதனுக்குத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருப்பதால் அவனது மனம் எப்பொழுதும் சிக்கல்களையும் போராட்டங்களையும் உடையதாக இருக்கிறது. ஏனெனில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற சிக்கல்கள் ஏற்படும். அனைவரது மனமும் ஒரு போர்க்களம்தான். அனைவருக்கும் பிரச்சனைகள் உண்டு என்பதுதான் உண்மை. எந்த நேரத்தில் எப்படிச் செயல்படும் என்று அறிய முடியாத மனம் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களுடன் ஒரே விதமான உறவு அவனால் கொள்ள முடிவதில்லை.
ஏன், தன்னுடனேயே எப்படி உறவு கொள்வது என்பது அவனுக்குத் தெரிவதில்லை. இந்த மனப் போராட்டம் மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே வந்திருக்கிறது. இது மனிதனின் அடிப்படைப் பிரச்சனை. தற்காலிகமாக மனதை அடக்கி வைப்பதால் அல்லது வேறு விடயங்களுக்கு மாற்றி வைத்தாலும் மீண்டும் மனம் தனது சிக்கலைத் தோற்றுவித்துக்கொண்டே இருக்கும். அதனால் இந்த மனம் என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. மனம் எண்ணங்களின் தொகுப்பு. அதற்குப் பதிலாக வேறு எண்ணங்களை நட்டால் மனதை மாற்றி விடலாம் என positive Thinkingஐ நட்டுத் தோல்வி கண்டுவிட்டது நவீன உளவியல் துறை.
ஆனால் வியாசரால் தொகுக்கப்பட்ட உபநிடதங்களோ (வேதாந்தம்), மனதில் தோன்றும் எண்ண எழுச்சிகள், தொடர் பிறப்புக்களில் ஏற்பட்ட அழுத்தமான பதிவுகளின் வெளிப்பாடே என அறிவு பூர்வமாக உரைக்கின்றன. அவற்றின் எழுச்சிகள், செயல் உருவம் பெறும்போது வாழ்க்கை என மேலும் கூறுகிறது. இவற்றைத் தெளிந்த அறிவு பெற்ற (ஞானம்) புத்தியினால் – ஆன்மிகப் பயிற்சிகளால் – தியானத்தால் அழிக்கவும் மேலும் பதிவுகள் ஏற்படாமலும் புலன்கள், மனம், புத்தியாக எனது பதிவுகளை ஏற்றுச் செயலாற்றிய ஆத்மாவின் உயிரின் விரிவுகளைச் சுருக்கி மீண்டும் ஆத்மாவுடன் இணைப்பதே – இணைத்து மகிழ்வதே இப்பிறப்பின் நோக்கமாகும் என அடித்துச் சொல்கிறது. மற்றைய மதங்களோ, தத்துவங்களோ இவ்வளவு ரத்னச்சுருக்கமாகச் சொல்லவில்லை. இவற்றை உணர்ந்து கொள்ள ஒரு வழிகாட்டி – ஒரு குரு அவசியம். தானே நுhல்களில் கற்று, வீடியோக்களில் பார்த்துத் தனக்குள் பதியம் வைத்துக்கொள்ள முடியாது. அம்முயற்சிகள் அகந்தையை வளர்க்குமேயன்றி அழிக்காது. முதல் குருவாகக் கொள்ளப்படு;ம் வியாசர் வேதங்களைத் தொகுத்து வேதாந்தமாகிய உபநிஷதங்களுக்கு விளக்கம் கொடுத்து அவ்விளக்கத்தை மகாபாரதத்தில் அறிவுப் பொக்கிஷமான பகவத்கீதையாகச் செலுத்தி அப்பொழுதும் திருப்தியுறாமல் புராணங்களாக – கதைகளாக வைத்து, தத்துவ உண்மைகளுக்கு வடிவம் கொடுத்து, சனாதன தர்மநெறிகளை சாதாரண மக்கள் மத்தியில் உலவவிட்டு, கலாச்சார நெறிகளை ஏற்படுத்தி மனிதனை அதியுயர் நிலைக்குச் செல்ல வழி செய்தார்.
இன்று சாதாரண இந்து மனங்களில் உள்ள தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், மத உணர்வுகள் வியாசரின் முயற்சியினால் ஏற்பட்ட வெளிப்பாடுகளே. இதிகாசமான மகாபாரதச் செய்திகள் எல்லாம் உளவியல் சொத்துக்களே! (Psychological Treatise) வியாசரைத் தெரிந்திருக்காவிடிலும் அவரால் ஏற்படுத்திய உளவியல் பாத்திரங்கள் எல்லா குடும்பங்களிலும் வாழ்ந்து வருகின்றன.
எல்லோரது குடும்பத்திலும் ஒரு பீமன், அர்ச்சுனன், தருமர், சகுனிமாமா, குந்தி, பீஷ்மர் என்று பாத்திரமேற்பவர்கள் தவறாமல் உண்டு என்பதையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். ஆகவே வழிகாட்டி Preceptor கிடைப்பதும் பரிணாம உந்தலே என்பதுவும் உபநிடதக் கூற்று.
கிருஷ்ணர் குறிப்பிடுகின்ற ‘தூய்மை” (சௌசம்) என்பதை ஆய்வுக்கு உட்படுத்துவோம். இதனால் புனிதத்தன்மையை மீட்டெடுப்போம்.
ஆத்மா நித்ய சுத்தமானது. இனிமேல் தனி ஒருமுயற்சியால் தூய்மைப்படுத்த வேண்டும் என்ற அவசியமற்றது. இந்த சுத்த சுபாவமே தன்னிலை என்று உணர்ந்து, அதில் மனதைக் கரைத்துக்கொண்டால் அதுவே முக்தி நிலை. ஆனால் மனிதனின் சுபாவமோ, உடலோடும், உள்ளத்தோடும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, அதன் செயல்களைத் தன் செயல்களாகவும், அதன் தன்மைகளைத் தன்னுடைய தன்மைகளாகவும் பாவித்து, அன்றாட வாழ்க்கையில் ஈடுபடுவதாகும்.
தானல்லாத, ஆனால் தன்னோடு இருக்கின்ற உடல், மனம் என்னும் உபாதிகளோடு தன்னை ஐக்கியப்படுத்தி, அனுபவத்தைத்தேடும் முயற்சிகளையே அன்றாட வாழ்க்கையின் சாரமாக ஏற்றுக்கொள்வது நாம் எளிதாய் பற்றிக்கொண்ட ஒரு பழக்கம்! இந்த உபாதிகளே (உறைகளே) ஆத்மாவின் குணத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாகும். உபாதிகளின் தன்மை ஆத்மா என்னும் பிம்பத்தைத் தெளிவாக பிரதிபிம்பம் செய்தால், அந்த உபாதியைத் தூய்மையான உபாதி என்றும், மலம் நீங்கியது என்றும், மாசற்றது என்றும் சமய இலக்கியங்கள் வருணிக்கின்றன. இப்பிரதிபிம்ப சுபாவத்தை அதிகரிக்கும் முயற்சியே சுத்திகரணம் எனப்படும்.
இது இரண்டு வகையானது. அகம் என்றும், புறம் என்றும் பெயர். புறம் என்பது புறச் சூழ்நிலைகளுக்கும், அதனோடு தொடர்பு கொள்ளும் ஸ்தூல (physical) உபாதிகளுக்கும் பொருந்தும்.
உடல் உட்கொண்ட உணவின் விகாரம் உடல். நேற்று அருந்திய பாலும், தேனும் இன்று உயிரணுக்களாகவும், இரத்தமாகவும், மாறுகின்றன. இது விஞ்ஞானமும், சமயமும் தெரிவித்த உண்மைகள். உணவு என்பது பஞ்சபூதங்களின் விகாரம். (மாறுபாடு). இவைகளிடத்தில் ஆறு சுவைகள் இருப்பதாகக் கருதுகின்றனர். சற்று ஆழமாகப் பார்க்கின் உணவின் சாரம் இந்தச் சுவைகளே! இந்தச் சுவைகளின் ரசாயன மாற்றங்களே நம் உடலில் தன்மயமாகும் உயிர் அணுக்கள்! அவைகளின் வளர்ச்சி உடலுறுப்புகளாக மாறிவிடுகின்றன. அப்படி மாறிக்கொண்ட, மிகச் சிக்கலான அமைப்புக்களைக் கொண்டதே மனித மூளை. உடல் அசைவுகளுக்கு முக்கியமானது மூளை. மனிதன் வளர்த்துக் கொள்ளும் பழக்கங்களின் பதிவேட்டிற்கும் மூளை என்றுதான் பெயர். இவ்வுடலை எப்படி உபயோகித்துப் பழகுகிறோமோ, அதே நிலையில் மீண்டும் உபயோகிக்கத் தூண்டுவது மூளையே. இத்தூண்டுதல்களுக்கு இரகசியமான காரணங்களாக அமைவது நாம் உட்கொண்ட உணவின் அம்சங்களாகிய ருசி.
உட்கொள்ளும் உணவில் ருசிகளை அடிப்படையாகக்கொண்டே ‘ஆஹார சௌசம்” என்னும் உணவுத் தூய்மை கருத்தில் கொள்ளப்பட்டது. இவ்வுணவு வகைகளை மூன்று விதமாகப் பெரியவர்கள் பிரித்துள்ளனர். அவை சத்வம், இராஜசம், தாமஸம் என்பனவாகும். சத்வ குண உணவு ஜீரணிக்க எளிமையானதும், இனிப்பானதும், பிற ருசிகளில் மிதமானதும் ஆகும். இராஜச உணவு கடினமாகவும், காரம் நிறைந்ததாகவும், உடலில் திடீர்ச் செயல்களைத் துhண்டுவதாகவும் இருக்கும். இவ்வகை உணவுகள் நமக்கு மிகவும் பழக்கமானவை. சனி, ஞாயிறுகளில் நம்மில் பெரும்பாலோர் உட்கொள்ளும் விசேட உணவெல்லாம் இவ்வகையைச் சார்ந்தவையே. கண்களில் நீரை ஆறாய்ப்பெருக்கும் ஆற்றல் அதிகமுள்ளது. ஏனெனில் அவை உடலில் இருக்கும் நீர்ச்சுரப்பிகளைத் தூண்டிவிடும் தன்மை கொண்டவை.
தாமஸம் என்பது உட்கொள்ளும்பொழுதே மயக்கத்தைத் தருவது. உண்ட இடத்திலேயே உறங்க வைப்பது. இவைகளையெல்லாம் கருத்தில்கொண்டு பார்க்கையில் சத்துவ உணவு, உடலின் மென்மைக் குணத்திற்கும், ஒரு விழிப்புணர்ச்சிக்கும், மூளையின் சீரான செயல்களுக்கும், நரம்பு மண்டலங்களின் வலிமைக்கும் காரணமாகின்றது.
ரஜோகுணம் – உடலில் ஒரு விறைப்பையும், தற்காலிகமான சுறுசுறுப்பையும் முடிவில் களைப்பையும் தருகிறது. தாமஸம் என்பது சோர்வில் சுகத்தையும், உறக்கத்தில் காதலையும் வளர்க்கிறது. இவைகளை உணர்ந்து உணவால் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது புறத்தூய்மையின் ஆரம்ப அம்சம்.
உட்கொண்ட உணவு சத்வ குணத்தினதாய் இருந்தாலும் கூட, உடலியக்கத்தை ஊக்குவிப்பது பிராணன் எனும் சுவாசமே. இதில் ருசியில்லை. அழகான மூக்கை வளர்த்துக்கொண்டு அசுத்தமான காற்றை விரும்பிச் சுவாசிப்பது ஒருவன் உடல் நலத்திற்கு அடிப்படையானது அல்ல. இதனால் புறத்தூய்மையின் இரண்டாவது அம்சமான பௌதீக சூழலும் அமையவேண்டியது அவசியம். இது காலையில் நீராடுதல், தூய ஆடை அணிதல், தான் வசிக்கும் சூழ்நிலையைச் சுத்தமாக வைத்திருத்தல் போன்றவை அடங்கும். இதனால் உடலில் மென்மையும், மூளைக்கு ஒரு புத்துணர்ச்சியும் தோன்றி, மனம் தன் சிந்தனைகளைச் செயலாக்கும்போது, உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒரு முரண்பாடு இல்லாமல் இருக்கத் துணை செய்கிறது. மாறாக புறத்துhய்மை என்பது, உடல் துhய்மை பெற வேண்டும் என்ற பெயரில் மாதம் நுhற்றுக்கணக்கான டொலர்களை ஒப்பனைப்பொருட்களில் செலவழித்து, உயர் ரக ஆடைகளை அணிந்து, இறைவனைத் தரிசிக்கத் தயாராகும் ஊர்வல முயற்சிகள் என்று கருத வேண்டாம்.
இதுவரை உடலைப்பற்றிப் பார்த்தோம். தூய்மையான உடல் என்பது ஆரம்பத்தேவை. இதனோடு திருப்திப்பட்டுக்கொண்டால், ஆன்மீக வளர்ச்சி அதோ கதிதான்! இன்று சிறைச்சாலையில் காணும் பல திருடர்களும், குற்றவாளிகளும் துhய ஆடை அணிந்தவர்களாயும், சத்துள்ள உணவுகளையே உட்கொண்டு ஆரோக்கியசாலிகளாகவுமே சிறைக்கு அழைத்துவரப்பட்டனர். உடல் ஆரோக்கியமானதாக இருந்தாலும், இல்லா விட்டாலும், அது தானாக இயங்;கப் போவதில்லை. உடலை இயக்குவது மனம்! மனம் உணவின் விகாரமல்ல. உணவின் விகாரமாகிய மூளையைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டிருந்தாலும் மனதிற்கு உணவு, ஒருவன் தேர்ந்தெடுக்கும் சிந்தனைகளே! சிந்தனை செயலுக்குக் கருவாய் அமைவது நம் அனைவரின் அனுபவமே! நாம் ஆற்றும் அன்றாடச் செயல்களைப் ‘பழக்கங்கள்’ என்று கூறினால், இப்பழக்கங்களின் ஆரம்ப இடம் மனித மனமாகவே இருக்கிறது. மனதின் பழக்கங்கள் துhய்மையானதாக இருந்தால், அப்பழக்கங்களைச் செயல் வடிவங்களாக்கும் உடலையும் பெருமளவிற்குத் துhய்மையுடையதாக வைத்துக்கொள்ள ஒருவனால் முடியும். எப்படி உணவின் ருசிகளை மூன்று விதங்களாகப் பிரித்தார்களோ அதேபோல உள்ளத்திற்கு உணவாகிய எண்ணங்களையும், நோக்கங்களையும் மூன்று விதங்களாகப் பிரித்திருக்கின்றனர்.
ஆரோக்கியம் அவசியமென்று கருதிய நோயாளி எப்படித் தனக்கு வேண்டிய மருந்தை ஒரு கடையில் இல்லாவிட்டாலும், மற்றொரு கடையில் தேடி வாங்கி உட்கொள்வானோ, அதேபோல் உள்ளம் சிறக்க வேண்டும் என்று ஒருவன் உண்மையில் விரும்பினால், அவன் அந்த உணவு எங்கிருந்தாலும் தேடிக்கொள்வான். அவன் தேட வேண்டிய முதல் ரக உணவே சாத்வீக எண்ணங்கள்.
1) ப்ரஹ்மாநு சந்தானம் (சாந்த விருத்தி) என்றும் சத்தியத்தின் அல்லது ஆத்மாவின் சாந்த சொரூபத்தை நிலைநிறுத்திக் கொள்ளுதல்.
2) நேற்று வளர்த்த சாந்தத்திற்கு அச்சுறுத்தல்களாக அமைவது இன்று நடக்கும் சம்பவங்கள். இவைகளை அச்சுறுத்தல்களாக ஏற்றுப் பழகாமல் இறைவனின் பிரசாதமாக ஏற்றுக் கொள்ளும் ‘பிரசாத புத்தி.’
3) அன்றாட வாழ்வில் தோன்றிய மகிழ்வூட்டும் பெருமை கொள்ள வைக்கும் சம்பவங்களைத் தன் திறமையால் வளர்த்ததாகக் கருதாமல் இறைவனின் அருள்வடிவமாக ஏற்று மீண்டும் அவனுக்கே சமர்ப்பிக்கும், ஈஸ்வர அர்ப்பண புத்தி இம்மூன்றும் சத்வ குணமென்றும், தெய்வ சம்பத்தென்றும் அழைக்கப்படும்.
தவிர்க்க வேண்டிய ரஜோகுண எண்ணங்கள்:
நேற்று நடந்த சம்பவங்களைப் பற்றியும், நாளை நடக்கப்போகும் சம்பவங்களைப்பற்றியும் மாறி மாறிச் சிந்தித்து மன விறைப்பை உருவாக்கும் எண்ணங்கள் ரஜோகுணம். பயமும், தோல்வி மனப்பான்மையும் இவைகளுக்குக் காரணம்.
தோல்வி மனப்பான்மையால் பிறர் நலத்தில் வெறுப்பும், பய உணர்வால் ஒன்றிலிருந்து ஒன்றிற்குத் தாவும் மன உளைச்சல்களும் ரஜோ குணத்தின் பிரதிபிம்பங்கள். இக்குணம் ஒருவனுடைய மனதில் திடீர் உற்சாகத்தையும் அவசர முடிவுகளையும் எடுக்கத் தூண்டுகோலாய் அமையும். இவ்விரண்டும் சரீரத்தின் தன்மைகளை உணராமல் சரீரம் தளரவும், ஏற்கனவே தேடி வைத்திருந்த உடல் ஆரோக்யம் சரியவும் வைக்கும். சாதகன் இவ்வாழ்க்கை முறைகளிலிருந்து, தன்னை புத்தி பூர்வமாக விடுவித்து, சத்வ குணத்தின் பிரகாசங்களை, சாந்தவிருத்தி, பிரசாதபுத்தி, ஈஸ்வர அர்ப்பணபாவம் முதலிவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அறிவின் பகைவன் தமோகுணம்:
உறக்கத்தை உயர்ந்த ரக சுகமாகக் கருதி, எதைப்பற்றியும் அறிய முயற்சிக்காமல், உணவும், உடற்போதையும் போதுமானதென்ற லட்சியத்தோடு அவையிரண்டையும் பிறர் உழைப்பில் பெற நினைக்கும் இவ்வெண்ணங்கள் தாமசத்தின் தடித்த பிரதிபிம்பங்களே! அவர்கள் மனத்திலும் சிந்தனைகள் தோன்றும்! ஆனால் ஒரு குறிப்பிட்ட தெளிவை நோக்கிச் செல்லாமல், நேற்று அடைந்த சுகத்தை இன்றும் சிரமமில்லாமல் பெறுகின்ற வழியை மட்டும் நினைத்துத் தீர்த்துவிட்டு மீண்டும் உறங்கப்போவதற்குத் துணையாய் அமையும். இவர்களைப் பகலில் ஒளியிருந்தும் பார்க்கமுடியாத கோட்டான்களுக்கு ஒப்பாகக் கூறுவர். இம்மூன்று விதமான எண்ணங்களில் முதல்வகை எண்ணங்களையே தன் சுபாவமாக மாற்றிக்கொண்டு, பின்னுள்ள இரண்டையும், மிகுந்த சிரத்தையோடு அவைகள் மனம் என்னும் வீட்டிற்குள் புக முயற்சித்தாலும் கூடத் தூரத் தள்ளிவைத்து அகத்தைத் துhய்மையாக வைத்திருப்பது ”உள்ளத்து உயர்வு” என்பதாகும்.! புறத்தூய்மையின் அவசியத்தை ஒருவன் உணர்ந்துகொள்ள வைக்கும் வளர்ச்சி, இவ்வகைத் தூய்மையையே பெரிதும் சார்ந்திருக்கிறது. இதை மறுத்து புறத்தூய்மையைப் பெருக்குவதில், பெருமைகொண்டு, அகத்துhய்மையை மறந்தால், நாமெல்லோரும், லௌகிகம் என்னும் சிறையில், ஆரோக்கியமான கைதிகளாகவே வாழ்வோம்!