ஆன்மிகத் தேடல் எங்கும் தொடங்கி விட்டது. வாழ்க்கையைக் கேள்வி கேட்க ஏறக்குறைய அனைவருமே ஆயத்தமாகி விட்டார்கள்போல் தோன்றுகிறது. இயற்கைச் சீற்றங்கள் மனித வாழ்வை அர்த்தமற்றதாக ஆகிவிட்டதுபோல் தோற்றமளிக்கிறது. எதுவும் நிரந்தரமானதல்ல என்ற உண்மை நிதர்சனப்படும் காலம் அண்மித்ததை அறிவித்து நிற்கின்றது. கடவுள் இருக்கிறாரா? என்ற கேள்வியும் “இல்லை, இருக்கிறார்” என்ற பதிலும் ஒன்றாகக் கேட்கக் கூடியதாக இருக்கிறது. கடவுள் இருக்கிறார் என்று யாரோ சொன்னதற்காக நம்புவதோ கடவுள் இல்லை என்று யாரோ சொன்னதற்காக மறுதலிப்பதோ எப்படிப் புத்திசாலித்தனமாகும்?
கடவுளை நம்புவதும் நம்பாததும் கடவுளின் பிரச்சனை இல்லை. அது முழுக்க முழுக்க உங்கள் பிரச்சனை. ராமர் இருந்தாரா? கிருஷ்ணர் வந்தாரா? யேசு இருந்தாரா? நபிகள் வந்தாரா? என்பதா பிரச்சனை! உங்கள் அனுபவம் என்ன? கடவுள் என்பதன் உன்னதத்தைப் புரிந்து கொள்ளவில்லை; கடவுளைப் பற்றிய உண்மையான அனுபவங்களைப் பெற்றதில்லை. ஆனாலும் கடவுளுக்கும் மற்றவருக்கும் இடையில் இடைத்தரகர்களாக இருந்து ஆதாயம் தேட இவர்கள் போடும் நாடகங்கள் சகிக்க முடியாதவை. கடவுளை நீங்கள் முழுமையாக நம்பி வாழ்ந்திருக்கிறீர்களா? சிலர் இருக்கிறார்கள். நெருக்கமானவர்களுக்கு உடல்நிலை மோசமாயிருந்தால் கடவுளிடம் வேண்டிக் கொள்வார்கள். அப்படியும் அவர்கள் பிழைக்கவில்லை என்றால் “கடவுள் என்பதெல்லாம் பொய்” என்று வீட்டில் இருக்கும் கடவுள் படங்களை எல்லாம் கழற்றி எறிந்து விடுவார்கள். தனக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்று கேட்டு நடக்கவில்லை என்றால் கடவுளே இல்லை என்று சொல்வார்கள்.
வளர்க்கப்பட்ட விதத்திலும் உங்களுக்குள் விதைக்கப்பட்ட விதத்திலும்தானே உங்களுக்குக் கடவுளை நம்பத் தெரிந்திருக்கிறது? கடவுள் இருக்கிறார் என்பது ஒரு நம்பிக்கை. இல்லை என்பது இன்னொரு நம்பிக்கை. இருக்கிறாரா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாது என்பதே நிதர்சனமான உண்மை. எனக்குத் தெரியாது என்று எப்போது தைரியமாக ஒப்புக்கொள்கிறோமோ அப்போதுதானே எதைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு முழுமையாகக் கிடைக்கும்.
வெறும் நம்பிக்கைகளை வைத்துப் பின்னப்படும் கற்பனைகளை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும்? கடவுளைப் பற்றி அறிந்துகொள்ளும் தாகம் உண்மையிலேயே இருந்தால் மற்றவர்கள் சொல்லிக் கொடுத்ததைக் குருட்டுத் தனமாக நம்புவதை விட்டு விடுங்கள். கடவுள் இருக்கிறாரா என்று நீங்களே தேடுங்கள். உங்கள் தேடலை உங்களிடமே ஆரம்பியுங்கள். எல்லையற்ற கடவுள் என்றொருவர் எல்லா இடங்களிலும் இருப்பது உண்மையானால் அவர் உங்களுக்குள்ளும் இருக்க வேண்டுமே! உருவமாகத் தேடாமல் கடவுள் தன்மை என்பதை முதலில் உங்களுக்குள் தேடிப்பாருங்கள். உங்களுக்குள் கடவுளைக் கவனித்து அனுபவித்து விட்டால் அப்புறம் அவர் அங்கும் இங்கும் எங்கும் இருக்கலாம் என ஒப்புக்கொள்ளலாம்.
ஒரு விடயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளல் அவசியம். உங்களுக்குப் புத்திசாலித்தனமாக வாழ்க்கையை நடத்தத் தெரிந்திருந்தால் கடவுள் இல்லாமலும் வாழலாம். ஆனால் புத்தியையும் அவன்தானே தருகிறான். வாழ்க்கையைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல் மூடத்தனமாக வாழ்பவராக இருந்தால் பு+ஜை அறையில் எத்தனை கடவுள் படங்களைத் தொங்கவிட்டாலும் பயனில்லை. “கடவுளுக்கு உண்மையில் எத்தனை முகங்கள்?” கடவுள் என்பவர் உங்களை விடப் பிரமாண்டமானவராக இருக்க வேண்டும் என்பதற்காக உங்கள் கடவுளுக்குப் பதினாறு கைகள் இருப்பதாக நீங்கள்தான் உருவகப் படுத்தினீர்கள். கடவுளுக்கு நான்கு முகங்கள், ஆறு முகங்கள் என்று கொடுத்தீர்கள்.
உண்மையைச் சொல்லுங்கள்… உங்களுக்கு எத்தனை முகங்கள்? வீட்டில் ஒரு முகம், பணியிடத்தில் ஒருமுகம், நண்பர்களிடத்தில் ஒரு முகம், பகைவர்களிடத்தில் ஒரு முகம். தெருவுக்குத் தெரு மாற்றுவதற்கு என்று எத்தனை முகங்களைச் சுமந்து கொண்டு இருக்கிறீர்கள்? முருகனைவிட உங்களுக்குத் தானே அதிக முகங்கள்? நம்முன்னோர்கள் கடவுள்களுக்குத் தோற்றங்கள் கொடு;த்ததற்குப் பல புத்திசாலித்தனமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றைத் தெரிந்து கொள்ளாமல் கடவுளைத் தெரிந்து கொண்டு விட்டதாக நினைப்பது உங்கள் மன (நுபழ) ஈகோவிற்குத் தீனி போடுவது மட்டுமே!
மதம் நமது இன்றைய வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாமலும் நம் நல்வாழ்வின் துறைகளைச் செப்பஞ் செய்யத் தகுதியற்ற உத்தரவுகளைக் கொண்டு மட்டுமே நிறைந்துள்ளதானால் அத்தகைய பழைய மத சம்பிரதாயத்தை ஒழித்துவிட்டு ஒரு புதிய நாகரீகமான பண்பாட்டை விரும்பத்தகுந்தவாறு அமைத்துக் கொள்ளலாம். ஏனெனில் மனிதன் தன்னுடைய இன்றைய வாழ்க்கையைப் பற்றித்தான் முக்கியமாகக் கவனிக்க வேண்டுமேயன்றிப் பரலோக வாழ்க்கையைப் பற்றியல்ல. இக் கொள்கையை மனதிற் கொண்டு உலகிலுள்ள மதங்களை ஆராயும் போது நமக்குத் தெரிவதென்னவென்றால் இந்து மதம் நமக்களித்திருக்கும் வேதாந்தக் கருத்துக்கள் ஒருக்காலும் எவராலும் தகர்த்தெறிய முடியாத அடிப்படைகளின்மீது அமைந்துள்ளவை என்பதையும் இதன்மீது தரத்தில் படிப்படியாக உயரும் நல்வாழ்க்கையையும் அமைதியையும் கொண்ட உலகத்தையே அமைத்து விடலாமென்பதைத்தான். ஆராய்ச்சியிலிருந்து அக்கொள்கைகள் பிரபஞ்ச வாழ்க்கைக்கே அடிப்படையானவை என்றும் ஒப்பற்ற முடிந்த முடிவுகள் என்றும் கூடத் திண்ணமாய்க் கூறலாம். இந்த நுhற்றாண்டு நாத்திகம், பொதுமை என்ற இரு கொள்கைகளின் ஆட்சிக்குட்பட்டதென்றும் சொல்லப்படும். ஏனெனில் நாம் எதைப்பற்றியும் சந்தேகப்படலாம். துணிந்து வெளிப்படையாகக் கேள்வியும் கேட்கலாம். சொல்பவர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசியானாலும் எவ்வளவு மதிப்பிற்குரிய ஞானியானாலும் அவர்கள் சொல்லுவது நம்பிக்கை ஏற்படுமாறு போதிக்காவிட்டால் அவர்கள் கூறுவதை நாம் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. நமக்குத் திருப்தியான முறையில் விஷயங்களை விவாதித்து தெளிவாக்கப் பட்டாலன்றி இவர்களிடத்திலும் நம்பிக்கை மருந்துக்கும் ஏற்படுவதில்லை. அறிவிற்கும் புத்திக்கும் பொருத்தமாகும்படி விஷயங்களை விளக்குபவர்களுக்கு நாம் பெருமகிழ்ச்சியோடு அடிமைகளாக இருக்கத் தயார் என்பதே இன்றைய மக்களின் மனோபாவங்களாக இருக்கிறது.
மனிதன் ஒவ்வொரு அனுபவத்திலும் பு+ரணத்தைப் பெற ஆவலுறுகின்றான். அவன் அமைதியையும் ஆனந்தத்தையும் விரும்புகிறான். முழு இன்பமும் முடிவற்ற அமைதியுமே மனிதனைத் திருப்தி செய்கின்றது. இவ்வாறு மேலும் அதிகப்படியான முழு இன்பத்தைத் தரும் அனுபவத்தைக் கருதியே புதிய சந்தர்ப்பங்களைத் தேடிக்கொண்டு ஒரு சூழ்நிலையினின்று மற்றொரு சூழ்நிலைக்குச் செல்கின்றான். இவ்விதம் அவன் செல்வதற்குக் காரணம் முழுமையானதும் ஆழமானதுமாகிய உயர்ந்த இன்பத்தை அடைவதற்கு அவனுக்குள் உள்ள உந்துதல்தான்.
இக்கால போலி முன்னேற்றம், தவறாகக் கொள்ளப்படும் விஞ்ஞானம் என்பவற்றால் நிறைந்த புது உலகிலுள்ள சூழ்நிலைகளைப் புறக்கணிக்காமலே நமது உபநிடத விசாரணை – வேதாந்த ஆராய்ச்சி தொடர்கிறது.