ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கின்ற நீங்கள் ஒவ்வொரு வாரமும் ஒரு மைல்கல்லைக் கடக்கிறீர்கள் என்பது தெரியுமா? உங்களை நோக்கி வருகின்ற பிரச்சனைகளுக் கெல்லாம் ஆன்மீகத் தீர்வைக் காண்கின்றீர்களா? அல்லது பழைய முறையில்தான் அவற்றை அணுகுகின்றீர்களா? உப தேசமே உங்களை அந்த வளர்ச்சிக்குக் கொண்டு சென்றாலும் நீங்கள் அதைச் சரியாக உணர்ந்து உங்களது வாழ்க்கையில் கடைப்பிடித்தால் மட்டும்தான் முன்னேறலாம். ஏனெனில் இது சாதாரண பாதையல்ல. பிறப்புக்களையே மாற்றி வைக்கின்ற பாதை. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அன்றாடம் ஈடுபடுகின்ற நிகழ்ச்சிகள் உங்களுக்குப் பெரிதாகத் தெரியலாம். ஆனால் உண்மையில் ஞானத்தின்படி பார்த்தால் இதுதான் பெரியது. அந்தப் பிரச்சனைகளையும் தீர்க்கத்தானே வேண்டும் என்று நீங்கள் கருதினால் நீங்கள் தொடர்ந்து இந்த முயற்சியில் முன்னேறிக் கொண்டு போனால் அந்தப் பிரச்சனைகள் தானாகவே முடிவடைந்து விடும். இதுதான் இதன் சிறப்பு. எல்லாம் ஒளிமயமாகத் தெரிகின்றதா? ஏனெனில் எல்லா வற்றையும் ஒளிமயமாகப் பார்க்கின்ற அறிவு உங்களுக்கு வந்து விட்டது. வேதாந்த ஞானத்தால் பார்க்கின்றபோது எல்லாம் ஒளி. ஒளியின் மாறுபட்ட தோற்றம்தான் உலகில் உள்ள எல்லாப் பொருள்களும். ஆத்மாவும் ஒளியே. இந்த ஒளியைப் பிடித்தால்தான் கர்மா உங்களை விடும். வாழ்க்கையில் என்ன வெற்றி வந்தாலும் அது நிற்காது. கர்மா அதை மாற்றி விட்டுவிடும் என்பது நியதி. எனக்கு ஒரு மில்லியன் டாலர் அதிர்ஷ்டப் பரிசு கிடைத்து விட்டது. இனி எதற்கு ஆன்மீக வகுப்பிற்குப் போகவேண்டும்? என்று நீங்கள் நினைத்தால் விழுந்த எண் பிழையானது, மாறி விட்டது, உங்களுக்குக் கிடைத்த தகவல் தவறு! என்று உடனே செய்தி வரும். உலகம் முழுவதுமே மாயையின் சுழற்சிதான். ஒரு பிரச்சனை தீர்ந்தால் உடனடியாக இன்னொரு பிரச்சனை கிளம்பும். இவை அனைத்திலிருந்தும் விடுபட்டால்தான் விடுதலை. நான் சொல்லிச் சொல்லி நீங்கள் பயிற்சிகளில் ஈடுபடக்கூடாது. நீங்களாகவே ஈடுபட வேண்டும். பயிற்சி இன்றி முன்னேற முடியாது, வராது. தியானத்தில் நற்பண்புகளை உருவாக்கு வதைப்பற்றி நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறேன். இந்த நற்பண்புகளெல்லாம் உங்களிடம் முன்பிருந்தே உங்கள் உள்ளத்தில் இருந்திருக்கின்றன. ஆனால் அவற்றின் சிறப்பு களை உணராமலேயே அவற்றைக் கவனமின்றிக் கையாண் டிருக்கிறீர்கள். அதுபோலத் தீய பண்புகளின் எதிர்மறை விளைவுகளைக் கவனிக்காமலேயே தொடர்ந்து அவற்றை வெளிப்படுத்திப் பாதிப்பை அடைந்திருக்கிறீர்கள். பழைய வாழ்க்கையின் நிகழ்வுகளைச் சற்று எடுத்துச் சிந்தித்துப் பார்த்தால் நான் சொல்கின்ற உண்மை விளங்கும். முன்பிருந்த கோபம், பொறாமை, எரிச்சல் எல்லாம் இப்போது உங்களிடம் இருக்கிறதா? இடையில் என்ன நடந்தது? உங்கள் உள்ளத்தை நீங்களே ஆராய்ந்து கர்மாவால் ஏற்பட்டிருந்த தீய உணர்வுகளை அறவே நீக்கிவிட்டீர்கள். இந்த ஒரு வருடமாக உங்கள் மனதை மாற்றுவதற்கான பயிற்சிகளாகத்தான் எனது உபதேசத்தை வடிவமைத்து வழங்கி வருகின்றேன். இப்போதும் பழைய போக்கு மிகச் சிறிய அளவிலாவது உங்களுக்குள்ளே இருக்கும். ஆனால் ஞானம் அவற்றை வலுவிழக்கச் செய்துவிட்டதால் செயல் படாது. உலகத்தோடு இயங்கிக் கொண்டிருப்பதால் இந்த நிலை. தொடர்ந்து நீங்கள் மேற்கொள்கின்ற பயிற்சிகளால் தான், தொடர்ந்து கண்காணித்தால்தான் தீய குணங்கள் வெளிப்படாமல் மெலிந்து இல்லாமற் போகும். இந்தக் குணங்களின் நன்மை தீமையான விளைவுகளைப்பற்றி சிந்திக்காமல் முன்பு வாழ்ந்தபோது உங்களிலிருந்து நற்பண்பு கள் அதிகம் வெளிப்பட்டனவா? அல்லது ஈகோவுடன் கோபம், வெறுப்பு, டம்பம், எரிச்சல் போன்ற தீயகுணங்கள் வெளிப்பட்டு உங்களைப் பாடாய்ப் படுத்தினவா? என்று இப்போது சிந்தித்துப் பாருங்கள். அடங்காமல் எதிர்த்துப் பேசிச் சண்டையிட்டு அதிகாரம் செய்து உங்களைப்பார்த்தாலே மற்றவர்கள் மனதிற்குள் முணுமுணுக்கும் அளவிற்கு நடந்து கொண்டீர் களா? அதோ வருகிறானே அவன் நல்லவன், தன்மையாக நடந்து கொள்வான் என்று மற்றவர்கள் சொல்லும் நிலையில் வாழ்ந்தீர்களா? அதுபோன்ற நிகழ்ச்சிகள் இப்போது நடந்தால், நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்? என்று சிந்தித்துப் பாருங்கள். ஏற்பட்ட மாற்றத்தின் அளவு தெரியும். அறியாமை யால் செய்துவிட்ட தவறுகளால் அனுபவித்த வேதனைகளின் அளவு தெரியும். (இப்போது நீங்கள் பழைய நிலையில்தான் நடந்து கொள்கிறீர்களா என்று இதற்காகத்தான் கேட்டேன்) ஞானம் பெற்ற பிறகு இப்போது உங்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு நீங்கள் பெற்ற ஞானத்தால் தான் தீர்வு எடுக்க வேண்டும். பழையபடி ஈகோவால் தீர்வு காணக்கூடாது. தோற்றாலும் பரவாயில்லை. நீங்கள் தியானத்தில் உங்களது வேண்டுதல்களைப் பிரார்த்தனையாகக் கேட்கின்றபோது இன்னும் உலக விவகாரங்களில் பெறவேண்டியவற்றைப் பற்றித்தான் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அல்லது ஆன்ம முன்னேற்றத்திற்கான பிரார்த்தனைகளை மேற்கொள்கிறீர்களா? எனக்குத் தியானம் இன்னும் நன்றாக வரவேண்டும், நான் ஆன்மீகத்தில் முன்னேற வேண்டும், நான் உன்னைக் காண வேண்டும், உன்னோடு நான் பேச வேண்டும், எனக்கு நீ வழிகாட்ட வேண்டும், உன்னோடு நான் ஒன்றாக வேண்டும்! இப்படிப்பட்ட உள்ளார்ந்த பேச்சுகளாக, உயர்ந்த விதத்தில் உங்கள் பிரார்த்தனைகள் அமைய வேண்டும். உபநிஷதத்தில் இப்படி ஒரு பிரார்த்தனை இருக்கிறது. உங்களுக்கு மிகப் பழக்கமான, மிகவும் தேவையான பிரார்த்தனை இது. “அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கு அழைத்துச் செல், அஸத்தோமா, ஸத்கமய! இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்! தமஸோமா, ஜோதிர்கமய! மரணத்திலிருந்து மரணம் இல்லா நிலைக்கு அழைத்துச் செல்! மிருத்யோர்மா அமிர்தம்கமய!” இந்தப் பிரார்த்தனை நம்மைப் பொய்யிலிருந்து உண்மைக்கும், இருளிலிருந்து ஒளிக்கும், அழிவிலிருந்து ஆக்கத்திற்கும் அழைத்துச் செல்லும்படி நாம் வேண்டுவதாகும். மரணம் என்பது உடலுக்குத்தான், எனக்கல்ல! என்ற உண்மை விளங்க வேண்டும். ஆதிசங்கரர், பாரதியார் போன்ற பெரியோர்களின் உடல் மறைந்து விட்டாலும் அவர்கள் எல்லாம் இன்றளவிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் கள். நாம் வெறும் காட்சியைக் கருத்தாக்கி அதைத்தான் அடைய வேண்டுமென்ற ஆவலில் இந்தப் பூமியில் உழல்கிறோம். வெறும் தோற்றம் என்பது பொய். (மித்யா) சத்யம் என்பது அன்பானது, அழகானது. இந்தப் “பொய்யிலிருந்து உண்மைக்கு அழைத்துச் செல்க!” என்ற வரியைத் தியானிப்போமாக! இதன் பொருளை உணர்ந்தாலே மோட்சம். அறியாமையில் இருந்து அறிவிற்கு என்னை அழைத்துச் செல்! என்ற பிரார்த்தனை அறியாமையுடன் நாம் இருப்பதை உணர்ந்து அறிவை நாடிக் கேட்பதாக அமைகின்றது. நாம் பூரணத்தை அடைவதற்காகப் பூரணமாகத் திகழ்கின்ற பேராற்றலிடம் சரணடைந்து வேண்டுகின்ற நிலை இது. இறைவனிடத்தில் செலுத்தப்படும் பிரார்த்தனை தியானமாக மாறும்போது அதற்கு அதிகப் பலன் கிடைக்கிறது. இந்தப் பிரார்த்தனையின் இறுதிவரி, மரணத்திலிருந்து மரணம் இன்மைக்கு அழைத்துச் செல். இந்த வரியைத் தியானத்தில் மீண்டும் மீண்டும் தியானிப்போம். உபநிஷத்துக்களில் உள்ள சாந்தி பாடங்கள் நம்முடைய தியானத்திற்கு மிக உகந்தவை. மூன்று வரிகளில் மிகச் சிறந்த பிரார்த்தனை. ஏனெனில் பேராற்றலிடமிருந்து சக்தியைத்தான் நாம் கேட்கின்றோம். அடுத்துத் தியானத்திற்கு எடுத்துக்கொள்ளும் பண்பு அபயம். (பயமின்மை) மக்கள் தெய்வமாக வழிபடுகின்ற எல்லா விக்கிரகங்களும் தமது வலது கரத்தை உயர்த்தி விரித்துக் காட்டியபடி இருக்கும். அதற்கு அபயஹஸ்த முத்திரை என்று பெயர். இதன் பொருள் பயப்படாதே! சில தெய்வப் படங்களில் யாமிருக்கப் பயமேன்? என்று எழுதியிருக்கும். கையைக் காட்டாத தெய்வங்களே இல்லை. வாழ்க்கையில் பார்த்தால் பயமில்லாதவர் என்று ஒருத்தருமில்லை. சின்னச் சின்ன விஷயங்களில் கூடப் பயம் நிச்சயம் ஏற்படும். பயத்திற்கும் அசாதாரணத் துணிவிற்கும் இடையில் நிற்கத் தெரிய வேண்டும். எதிலும் நிதானம் இருக்க வேண்டும். பயப்படுவோர்களுக்காகத்தான் முத்துக்கருப்பு சாமி, நரசிம்மர், துர்க்கை, காளி என்றெல்லாம் கடவுள் சக்திகளைப் பயங்கரமாகவும் உருவகப்படுத்தி இருக்கின்றனர். இவற்றைப் பார்த்து வழிபடுகின்றபோது பயம் போய்விடும். கொடூர பாவனை கொண்ட இந்தத் தெய்வங்களுக்கு ஏற்றபடி சிங்கம், புலி, சிறுத்தை, எருமை என்று வாகனங்களையும் அமைத்து வைத்தனர். ஏனெனில் பிழையான செயல்களை செய்பவர்களை இத்தனை தெய்வங்கள் கட்டாயம் தண்டிக்குமென்றும் அநியாயம் செய்பவர்களைத் தட்டிக் கேட்க வலிமை இல்லாமல் பயப்படுபவர்களுக்கு பக்கபலமாக இருந்து இவை உதவும் என்றும் உளவியல் ரீதியான ஒரு நம்பிக்கையை, பயத்தை, மையமாக வைத்து ஏற்படுத்தியுள்ளனர். மேலும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கைச் சக்திகள் கொடூரமான ஆற்றலை உள்ளடக்கியவை என்ற பொருளும் இதில் இருக்கிறது. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எல்லோரிடத்திலும் இந்தப் பயம் இருக்கிறது. பயம் இல்லாதவர்களே இல்லை. கயிறு பாம்பாகத் தெரிவதும், இருட்டு வெருட்டுவதும் பயத்தால்தான். எங்கும் பயம் இருந்தாலும் பயப்படாதே! என்று சொல்லும்போது அங்கு ‘நான்’ வந்துவிடுகிறது. மனித மனதில் பயம் என்பது மிக வலுவான இடத்தில் இருக்கிறது. நான் என்பது இல்லாமற் போனால் பயம் இருக்காது. நான் என்ற இடத்தில் ஜீவன் என்று வைத்துப் பார்த்துப் பழகினால் பயம் போய்விடும். இந்த பயம் எனக்கு இல்லை. இந்த ஜீவனுக்குத்தான்! என்று ஒருவாரம் மனதில் தொடர்ந்து பழகிப் பாருங்கள். படிப்படியாகப் பயம் குறைந்து பிறகு இல்லாமற் போகும். பயப்படக்கூடாது, பயம் தேவையற்றது என்பதையெல்லாம் அறிவாக நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் பயத்தில் இருந்து விடுபடமுடியவில்லை, பயந்து பயந்து வாழ்கின்றோம். பயப்படுவது சாதாரணமாக அமைந்து விட்டது. உயிரைக் காக்கின்ற வேளைகளில் பயம் ஒரு ஆற்றலாக வெளிப்பட்டுச் செயல்பட்டிருக்கின்றது. மிகப்பெரிய ஆபத்திலிருந்து தப்பிக்க அந்தப் பயமே உதவி செய்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். பயப்படுகின்ற நல்லவர்களுக்கும் கதியற்றவர்களுக் கும் இறை சக்திதான் ஆற்றலாக இருந்து தூண்டி அப்படிச் செயல்பட வைக்கிறது. அவரவர் வாழ்க்கையில் இப்படிப்பட்ட அதிசயங்கள் எவ்வளவோ நிகழ்ந்திருப்பதை இப்போது நினைத்துப் பாருங்கள். இறையருள் தக்கசமயத்தில் நிச்சயம் காக்கும். பயப்படுதல் சாதாரணமாகிவிட்டது. பயத்தை வெறும் அறி வினால் மட்டும் நீக்க முடியாது. அபயம் அவசியமாகிறது. இந்தத் தியானத்தில் இப்போது எதைக்கொண்டு, எவ்வளவு நம்மனம் பயப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும். பயத்தின் அளவு, காலம், காரணம் ஆகியவற்றைக் கண்டறிதல் முதற்படி. எதைக்கண்டு நாம் அதிகமாகப் பயப்படுகிறோம்? எவ்வளவு காலம் பயம் நீடிக்கிறது? என்ற உண்மைகள் அமைதியான மனதில் வெளிப்படும். இப்பொழுது இந்தக் கேள்வியைக் கேட்டு பதிலை அறிய முயல்வோம். ஒவ்வொருவருக்கும் பய அளவு மாறுபடும். பொதுவாக எதைக் கொண்டு பயப்படுகிறோம் என்பதை அவரவர் கேட்டுக் கொள்ள வேண்டும். பயத்திற்குப் பல காரணங்கள் இருந்தாலும் எதைக்கண்டு அதிகம் பயப்படுகின் றேன் என்ற கேள்விக்கு அமைதியான மனதில் பதில் கிடைக்கும். அபயம் என்பது பயத்திலிருந்து விடுதலை. நமது மனம் பயந்து பழகியிருக்கிறது. உண்மையில் பயப்படு வதற்குக் காரணங்கள் இல்லை என்று அறிந்த போதிலும், பயம் பயனற்றது என்று அறிந்த போதிலும் பயத்தை விடமுடிவதில்லை. பயந்து பழகிய நாம் மீண்டும் பழக்கத்தால் பயத்திலிருந்து விடுதலை அடைய வேண்டும். தியானத்தில் எதைக் குறித்த பயம் என்னைத் தாக்குகிறது என்ற கேள்விக்கு விடைகாண வேண்டும். நான் ஆத்மா, ஆத்மா பரமாத்மாவின் ஒரு துளி என்பதை அறிந்த பிறகு நாம் ஏன் அல்லது எதற்குப் பயப்பட வேண்டும்? இதை உறுதியாக நம்பினால் நமக்குப் பயம் எதற்கு? பயம் என்பது மனம் சார்ந்த பிரச்சனை. பிறகு அது உடல் சார்ந்த பிரச்சனையாக மாறிவிடும். எனவே மனம் சார்ந்த பிரச்சனையை மனத்தாலேயே வெல்ல வேண்டும். எனக்கு ஊறு வரும் என்பதால்தான் பயம். எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் என்று விட்டால் பயம் எப்படி வரும்? ஒரு துணையில்லாமல் பயத்தை விரட்ட முடியாதா? துணை இருப்பவர்கள் எல்லாம் பயப்படுவதில்லையா? நான் இறப்பதில்லை. எனக்குள் அவன் இருக்கிறான். அவனுக் குள் இந்த உலகம் முழுவதும் இருக்கிறது. உலகின் மிகப்பெரிய ஆற்றல் என்னோடு இருக்கிறது என்ற உண்மை என்னில் பதிந்தால் எனக்குப் பயமிருக்காது. நான் இனிப் பெற்றுக் கொள்ளவும் இந்த உலகில் எதுவுமில்லை. இந்தப் பூரண மனநிலை இருந்தால் எந்தப் பயமும் என்னைத் தாக்காது. நீங்கள் ஒழுங்காகத் தியானம் செய்து அதனுடன் உள்ளார்ந்த தொடர்பு கொண்ட நிலையிலேயே இருந்தீர்கள் என்றால் உங்கள் ஆன்மீக சக்தியின் வலிமை உங்கள் குடும்பத்தையும் உங்களது சூழ்நிலையையுமே சரியாகக் கொண்டு செல்லும். உங்களது பிள்ளைகளின் எதிர்காலத் தைப் பற்றிய பயம் தேவையில்லை. தியானம் செய்பவரின் வீட்டிலுள்ள பிள்ளைகள் பிழையாக நடந்து கொண்டாலும் அது பழுதாகப் போய்விடாது. விபத்துக்கள் எதுவும் ஏற்படாது. கர்மாவின் பயனாக ஆக்ஸிடண்ட் ஏற்படும் நிலை வந்தாலும் கடைசி நிமிடத்தில் சமாளிக்கப்பட்டுச் சிறிய அளவில் முடிந்து விடும். உங்களது அலைகளின் தொடர்பினால் உங்கள் குடும்பத்தவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். துரதிர்ஷ்ட மான எதுவும் நடக்காது. மாறாக நல்லவை நடக்கும். உங்கள் வீடு, அதன் சூழ்நிலை, செய்கின்ற செயல்கள், பு+ங்கன்றுகள் போன்ற எல்லாமே உயர்வாக சிறப்பாக இருக்கும். ஆனால் தியானமே செய்யாமல் வரவேண்டிய நன்மைகளை மட்டும் அதிகமாக எதிர்பார்த்தால் அப்படி நடக்காது. உங்களில் ஆத்மசக்தி எழும்பி விட்டதென்றால் கிரகங்கள்கூடக் கடுமை யாகச் செயல்பட்டு வருந்தாது. கர்மாவால் நிகழவேண்டியவை நிகழ்ந்தாலும் அதுகூடக் கர்மக் கழிவாக அமையுமே தவிர உங்களைத் தாக்காது. இயற்கைச் சக்திகூட உங்களுக்கு ஆதரவாகத்தான் செயல்படுமே தவிர எதிராகச் செயல்படாது. இந்த ஆனமீகப் பயிற்சிகளில் அயராமல் தொடர்ந்து ஈடுபட்டு ஆத்மாவுடனேயே இணைந்துள்ள நிலையில் இருக்கப்பழகி விட்டீர்களென்றால் குடும்பத்தைப் பற்றியோ எதிர்காலத்தைப் பற்றியோ கவலைப்படத் தேவையில்லை. கடவுளும் நானும் வேறல்ல என்பது ஞானம் பெற்றவர்களுக்கு நன்கு விளங்கும். ஒருசிலரை மட்டும் இந்த ஆத்ம வித்தையைப் பயில்வதற்குப் பிரம்மம் தேர்ந்தெடுத்திருக்கிறது என்றால் இது சாதாரண ஒரு விஷயமல்ல. அறியவேண்டும் என்று மிகப்பலர் விரும்பினாலும் கூட அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்காது. பாpணாமத்தில் முன்னேறிய ஜீவன்களுக்கு வாழ்க்கைப் பாதை ஆன்மீகத்தை நோக்கித் திரும்பும். அப்படியே சிலர் விரும்பி வந்தாலும் தொடர்ந்து இதேபாதையில் செல்ல அனுமதிக்காது. ஏனெனில் இங்கு ஆத்மா அல்லாத மற்ற பொய்யான எல்லாமும் உடைத்து எறியப்படுகின்றன. இதுவரை தொpயாத ஒரு புதிய பாதையை நோக்கி நீங்கள் சென்றுகொண்டிருக்கிறீர்கள். ஆத்மா இல்லாத மற்ற அனைத்துமே பொய் என்றும் வெறும் தோற்ற மயக்கங்கள் என்றும் இப்போது நீங்கள் அறிந்து விட்டீர்கள். இந்த இடத்தில் என்னுடைய சிந்தனை என்னவென்றால் இந்தப் பயிற்சியில் உங்களின் தொடர்ச்சி இல்லை என்பது தான். வாழ்க்கையைவிட்டு விலகித் தொடர்ச்சியைத் தொட்டு விட்டீர்கள் என்றால் மிகச் சிறப்பு. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக உங்களில் ஆத்மத் தொடர்பு ஏற்படவிடாமல் கர்மாவும் மாயையும் தடுக்கின்றன. மாயை என்பது உலகம். கர்மா என்பது அவரவாpன் வினைப்பயன். தனிப்பட்ட விதத்தில் பங்கீடு செய்யப்பட்ட மாயைக்குக் கர்மா என்று பெயர். மாயையும் கர்மாவும் உங்களைப் போட்டு அலைக்கழித்திருக் கின்றன. வாழ்க்கையில் எத்தனையோ அடிகளைக் கொடுத்து உங்களை அழ வைத்திருக்கின்றன. பாpணாமத்தில் உயர்ந்த நிலையில் நிற்பவர்களுக்கு அதிகளவில் அடிகள் விழுந்திருக் காது. அப்படிப்பட்டவர்களால்தான் இந்த ஆத்ம கல்வியில் தொடர்ந்து ஈடுபட முடியும். இப்படி இங்குவந்து இதைக்கேட்பதற்கே ஒரு பலன் உண்டு என்பது உங்களுக்குத் தொpயுமா? இறை சக்தியான ஆத்மாவோடு நீங்கள் இணைந்து விட்டீர்கள் என்றால் பிறகு எந்தப் பிரச்சனை உங்களுக்கு ஏற்பட்டாலும் அது கழற்றி விட்டுவிடும். வெளியில் சொல்ல முடியாத எத்தனையோ பிரச்சனைகளை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்தித்து இருப்பீர்கள். ஆன்மீகத்தை நோக்கி நீங்கள் திரும்பியபிறகு அவை எல்லாம் தானாகவே விடுபட்டுப் போய்விடும். முன் நிகழ்ந்தவற்றை ஓடவிட்டுப் பார்த்தீர்கள் என்றால் இந்த உண்மை விளங்கும். மாயையும் கர்மாவும் நடத்திய கூட்டுச் சதியில் இருந்து பிரம்மம் உங்களை விடுவித்திருக்கிறது. “என்னைப்பற்றி யார் மற்றவர்களுக்குச் சொல்கிறானோ, அவனது அலுவல்களை நான் பார்க்கிறேன்” என்று கீதையில் கண்ணன் சொல்கிறார். அவனைப் பற்றியே எப்பொழுதும் உங்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருப்பதால் எதுவுமற்ற நிலையிலும் நான் ஆனந்தமாக எவ்வித பொறுப்புகளும் இல்லாமல் நிம்மதியாக இருக்கின்றேன். உங்களுடைய கர்மாவையும் மாயையையும் உங்களில் இருந்து நீக்குவதற்கு நான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். இப்பொழுது நான் உங்களிடம் கேட்பது, தியானத்தில் எது பற்றிய பயம் உங்களைத் தாக்குகின்றது? நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளா? அல்லது செய்த வேலைகளா? செய்தவை, முடிந்து போனவை. அவை அறியாமையால் செய்தவை. எனவே அவற்றைப் பற்றிய பயம் அர்த்தமற்றது. நாளையோ என்ன நடக்கும் என்பது தொpயாத ஒன்று. அது அவனுடைய விருப்பம். எனவே இரண்டு விதத்திலும் இந்த நிலைக்கு வந்தபிறகு பயம் என்பது இல்லை. ஆரோக்கியம், பொருளாதாரம், உறவுகள் இவ்விதம் பல காரணம் பலருக்கு இருக்கலாம். பாதுகாப்பின்மையும் பயத்திற்கு ஒரு காரணம். இக்காரணங்களை அறிந்ததற்குப் பின் இவை பயத்திற்கான காரணமாகத் தோன்றுகின்றனவே அன்றி இவை உண்மையான காரணமில்லை. இருந்தாலும் இவை ஏன் பயமாகத் தோன்று கின்றது என்றால் உண்மையை அறிந்தும் அறியாமையில் இருப்பதால். உண்மை என்பது சத்தியம். எனக்குள் அது இருக்கிறது. அப்படி இருந்தும் இன்னும் பல விஷயங்களுக்குப் பயப்படு கின்றேன் என்றால் மனம்தான் அதற்குக் காரணம். மனம் வேண்டுமென்றே நம்மைப் பரம்பொருளிடம் சேரவிடாமல் பிhpப்பதற்காகப் பயத்தை உண்டாக்குகிறது. எனக்கு உண்மை தொpயும். நீ என்னைப் பயப்படுத்தாதே. பேசாமல் இரு என்றால் பின்பு பயம் போய்விடும். பயப்படுவது மாயையால்தான். எவற்றைக் காரணம் என்று நினைத்தோமோ அவை காரண மல்ல. அவை வெறும் தோற்றம். மனம் காரணமாகத்தான் பயம் தோன்றுகிறது. பயத்திற்குப் பொய்யான காரணம் மரணம். எதைக் காரணமாகக் கண்டறிகிறோமோ அவை உண்மை அல்ல. இதை உணரும்போது பயமும் மெதுவாக நீங்கி விடுவதை உணரலாம். எது எனது பயத்திற்குக் காரணம் என்று நான் நினைக்கிறேனோ அது கற்பனை. மனதின் சேட்டை அது. நான் பயத்திற்குக் காரணமாக நினைப்பது மற்றவர்களுக்குப் பயத்தின் காரணமாக இருப்பதில்லை. ஞானிக்கு மரணம் பயக் காரணமல்ல. ஞானியால் மரணத்தை நீட்டிக்க முடியும். ஏற்றுக்கொள்ள முடியும். பரமாத்மாவான அவனுக்கு எல்லாம் தொpயும். உங்களையும் அவனுக்கு மிக நன்றாகத் தொpயும். தியானம் என்று உங்கள் சக்தியை ஒழுங்கு படுத்தி அவனை நோக்கி எப்பொழுதும் செலுத்திக் கொண்டு இருங்கள் என்று குருவாகிய நான் மிக அதிகளவில் தூண்டிக்கொண்டு இருக்கிறேன். ஆனால் அதை முழு முயற்சியுடன் நிறை வேற்ற வேண்டிய கடமை உங்களுடையது. உங்களது முயற்சி வெற்றி அடைகின்றதோ இல்லையோ முயற்சியை நீங்கள் கைவிடாமல் தொடர்ந்து முயல வேண்டும். உங்களுக்குத் தரப்பட்ட சக்தியை வேறு பக்கமாகச் செலுத்தாமல் அவனை அடையவே முயலுங்கள். மற்றவை அவன் பொறுப்பு. மிகப் பொpய சக்தியின் கையில் இருப்பதாக நினைத்து சதாசர்வ காலமும் தியான மன நிலையில் அவனையே நினைத்து வாழுங்கள். எவ்வித பயமும் நடுக்கமும் உங்களுக்கு ஏற்படாது. வாழ்க்கையில் உங்களுக்குத் தேவையானது கிடைக்கும்.