Description
உயர் சம நிலைஹரி ஓம்
வணக்கம் வாசகர்களே!
2011 மார்ச் மாத வெளியீடாக “உயர் சம நிலை”
என்ற இந்த நூலை உங்களுக்குத் தந்திருக்கிறோம்.
மனத்தால் மனிதன் வாழ்கிறான். மனம் என்பது எண்ணக் குவியல். எண்ணக் குவியலின் ஓட்ட முடிவிலே உண்மையை காண இயலாது. வெறிச்சிடும் நெஞ்சம் எண்ணங்களின் பேச்சிலே நிறைந்து வழியும். நாம் புத்திக்கூர்மையால் புதுப்புதுத் தத்துவங்களை உருவாக்கி அவை நிறைவு பெறாத ஏக்கத்தால் வருந்துகிறோம். அவற்றை அடையப் பல கொள்கைகளை வகுத்து வணக்க ஸ்தலங்களுக்குச் சென்று அங்கே நம்முடைய மனத் தோற்றங்களில் நம்மை இழக்கிறோம்.
உறுதியுள்ள மனநிலை என்பது உலக இயல்பை மறுப்பதாகும். அனுபவங்களால் மனம் சுத்தமாகாது. அனுபவத்திற்குப் புறம்பானதே கள்ளமற்றநிலை. அது எண்ணங்களால் பயன்படுத்த முடியாத ஒரு நிலை. நாம் கோட்பாடுகளையும் பிடிவாதமான நம்பிக்கைகளையும் சடங்குகளையும் மதம் என்ற பண்பாட்டின் ஒழுக்கத்தால் விளையும் கண்ணியம், நேர்மை எல்லாவற்றையுமே சற்றே தள்ளி வைக்க முடியுமானால் மனித எண்ணத்தினால் தீண்டப் பெறாத மெய்நெறி வாழ்க்கை என்பதைக் கண்டறியலாம். மெய்நெறி வாழ்க்கை எவ்வித நம்பிக்கை யும் அற்றது. ஏனெனில் அவ்வாழ்க்கை ‘நாளை’ என்பதே இல்லாதது.சிறந்ததைத் தேடுகிற உண்மையாகவும் உறுதியாகவும் மனிதன் இப்பிரபஞ்சமே தன் பக்கத்தில் துணை இருப்பதைக் காண்பான்.
கடவுளைத் தந்தையாகவும் மனிதனை உடன் பிறந்தவனாகவும் ஏற்றுக்கொண்ட எமக்குக் குலம், குடிமை எல்லாம் ஒரு பொருளாகத் தெரியவில்லை. பிறப்பின் சிறப்பு எம்மைப் பொறுத்த மட்டில் ஒரு அறிவீனம். எல்லோரும் ஒரே தந்தையின் குழந்தைகள். எல்லோரும் அழிவற்றவர்கள். எல்லோரும் வாழ்ந்து வெல்பவர்கள் என்பதே எமது கருத்தாகும். ஒவ்வொருவரதும் முதல் கடமை தன்னையும் தன் சூழ்நிலையையும் தகுந்த விதத்தில் தானே முன்னேற்றிக் கொள்ள வேண்டும். இந்த முயற்சியின் பயனளிப்பில் இருந்து இரண்டாவது கடமையாக மானிடத்திற்கு உதவி வேண்டுமென்பதை தன்னம்பிக்கை கலந்த தன்மதிப்போடு அவரவர் உணர வேண்டுமென்பதற்காக இந்நூல் வெளிவருகிறது.
இந்நூல் எமது “ஒளிரும் உண்மைகள்” வரிசையில் 15வது நூலாக வெளிவருகிறது. கிருபா, இருதயா, சசி ஆகியோரின் ஈடுபாடு பாராட்டத்தக்கது.
நன்றி
அன்பு ஆசிகளுடன்
ஸ்வாமி பரமாத்மானந்தா
ரொறன்ரோ, கனடா
மார்ச் 3, 2011
www.cyvo.org
There are no reviews yet.