Description
ஒளியில் ஒன்றிய உள்ளம்ஆசிரியரிடமிருந்து…
ஹரி ஓம்!
எமது 23வது வெளியீடாக ‘ஒளியில் ஒன்றிய உள்ளம்’ என்னும் இந்நூல் மலர்கின்றது. முன்னைய வெளியீடுகளுக்குக் கிடைத்த ஆதரவும் பாராட்டும் இந்நூல்களை ஆண்டு தோறும் வெளிவரச் செய்கின்றது.
வேத உண்மைகளை எடுத்துரைத்து, மனித வாழ்க்கையின் நோக்கத்தையும் அதை அடைகின்ற வழியையும் சொல்லித் தருகின்ற சாகாக் கல்வியான ஆன்மீகக் கல்வியை இப்போது நீங்கள் பெற்றுவிட்டீர்கள். ஆன்மீக சாதகர்களாகிய உங்களுக்கு நான் யார்? நான் ஏன் பிறந்தேன்? இந்த உலகம் என்பது என்ன? எனக்கும் இந்த உலகத்திற்கும் என்ன தொடர்பு? நான் நினைத்தவை நிறைவேறாததற்கும் நான் நினைக்காதவை நிகழ்வதற்கும் என்ன காரணம்? உறவுகளின் உண்மைத் தன்மை என்ன? போன்ற எண்ணிலடங்கா வினாக்களுக்கு விடை தெரிந்து விட்டது. இந்த வகையில் உண்மை பற்றிய அறிவைப் பெற்றாகிவிட்டது. அதுமட்டும் போதுமா? கற்றதைப் புரிந்துகொண்டு தன்னுடைய தாக்கி அதை மிக அழகாக, முழுமையாக வெளிப்படுத்த வேண்டுமல்லவா?
அதற்கு ‘நான்’ மாற வேண்டும். ஆம் !நான் என்று இதுவரை நினைத்த ஒன்று பொய்யாகி விட்டபின் உண்மையான நானாகிய என்னில் நான் சேர வேண்டும்.அதற்கு அழுக்கடைந்து இருண்டிருக்கும் என் மனதைச் உற்று நோக்கி ஆராய்ந்து நம்மில் ஊறியிருக்கும் நல்ல குணங்களையும் தீய குணங்களையும் கண்டறிய வேண்டும்.
அதன்பின் நற்பண்புகளை மேலும் வளர்த்தெடுத்துத் தீயகுணங்களை அறவே நீக்க வேண்டும்.தொடர்ந்த தியானம்தான் இதற்கு ஒரே வழி. ஞானத்தோடு தியானமும் சேர்ந்தால்தான் முயற்சி முழுமையடையும். தியானம் என்பது அழியக்கூடிய பொய்யான ‘நானை’, சத்தியப் பேரொளியாகிய என்னிலிருந்து வேறாகப் பிரித்தெடுப்பது. அதன்பின், ஒளிமயமான என்னிலேயே நான் எப்போதும் இணைந்திருப்பது. இந்நிலையில், “எல்லாமாய்ப் பரந்து விரிந்திருக்கும் ஒன்றேயான பரம்பொருள்தான் என்னுள் நானாகவும் இருக்கிறது” என்னும் பரம சத்தியம் என்னுள் ஒளிரும்.
இந்த அதி உயர் நிலையை நீங்களும் அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த உபதேசங்கள், நூல் வடிவில் உங்களுக்கு வழங்கப்படுகின்றன. நிறைவடைய விரும்புபவர் கள், நிம்மதியை நாடுபவர்கள் தொடர் தியானத்தில் தொடர்புகொள்ள இதில் கூறப்பட்டுள்ள வழிமுறைகள் நிச்சயம் உதவும். அதோடு இந்த வாழ்க்கையின் உண்மைத் தன்மையும் உங்ளுக்குத் தெளிவாகப் புரியும். தியானத்தால் பொலிவுறும் உங்கள் உள்ளம் ஆத்ம ஒளியில் ஒன்றட்டும்!
எழுத்தாளர் விஜயா ராமனின் தொகுப்பில் இந்நூல் வெளிவருகிறது. கிருபா, இருதயா, சசி, விவேகா ஆகியோருக்கும் எமது ஆசிகள்.
அன்பு, ஒளி, ஆசிகளுடன்
ஸ்வாமி பரமாத்மானந்தா
ரொறன்ரோ
03.03.2015
ரொறன்ரோ
There are no reviews yet.